பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்- மம்தா பானர்ஜி

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

உலகின் முக்கிய தலைவர்களும் பத்திரிகையாளர்களும் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவுக் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தமுள்ள 50 ஆயிரம் பேரில், இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் யூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் அதிகாரி அசோக் லவசா, முன்னணி பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஜனநாயகத்தின் மூன்று தூணாக உள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை பெகாசஸ் மென்பொருளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று விமர்சித்ததோடு அல்லாமல் தனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் கண்காணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.