பணமோசடி செய்த மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தேசப்பிதா காந்தியடிகளின் இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகளான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் (வயது 56). தென் ஆப்பிரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வரும் லதா ராம்கோபின், சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.

ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது இந்திய வம்சாவளியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

New Africa Alliance Footwear Distributors என்ற நிறுவனம் சணல், துணி மற்றும் காலணி உற்பத்தி மற்றும் இறக்குமதியில் ஈடுபட்டுவருகிறது. பிற நிறுவனங்களுக்கு லாப பகிர்வு முறையில் கடன் வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட்டில் இந்நிறுவன தலைவர் எஸ்.ஆர்.மகாராஜ் என்பவரை சந்தித்த காந்தியின் கொள்ளுப்பேத்தியான லதா ராம்கோபின், NetCare என்ற மருத்துவமனை நிர்வாகத்திற்காக 3 கண்டெய்னர்கள் சணல் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், அந்த ஆர்டருக்கான இறக்குமதி மற்றும் சுங்க வரி செலுத்த, நிதி நெருக்கடி காரணமாக தன்னிடம் பணம் இல்லை என்றும் 6.2 மில்லியன் ராண்ட் (தென் ஆப்பிரிக்க பணத்தின் பெயர்) இதற்காக நிதி கடனாக வேண்டும் எனவும் தங்களுடன் லாப பகிர்வு செய்து கொள்வதாகவும் கேட்டிருக்கிறார். மேலும் NetCare மருத்துவமனை உடனான சணல் ஒப்பந்தம் குறித்த ஆர்டர் காப்பியையும் அவரிடம் காட்டியிருக்கிறார் லதா.

லதா ராம்கோபின் சமூக செயற்பாட்டாளர் என்பதாலும் அவர் மீதான நன்மதிப்பு காரணமாகவும் நம்பிக்கை வைத்த தொழிலதிபர் மகாராஜ், அவருக்கு 6.2 மில்லியன் ராண்டை கடனாக அளித்திருக்கிறார். பின்னர் அதே மாதத்தின் இறுதியில் NetCare மருத்துவமனைக்கு பொருட்களை சப்ளை செய்துவிட்டதாகவும் அதற்கான பணத்தை அந்நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக காத்திருப்பதாகவும் இன்வாய்ஸ் ஆர்டரை லதா காட்டியிருக்கிறார்.

ஆனால் சிறிது நாட்களில் லதா தன்னிடம் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது எனவும் தன்னை அவர் மோசடி செய்திருக்கிறார் என்பதையும் அறிந்த மகாராஷ், லதா மீது புகார் அளித்து வழக்கு தொடுத்திருக்கிறார். 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது டர்பன் நீதிமன்றம் லதாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.

காந்தியின் பேத்தியும், ஆஷிஷ் லதா ராம்கோபினுடைய தாயாருமான இலா காந்தி, பல்வேறு சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றிருக்கிறார். மேலும் 1994 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.