மத்திய அரசு உரங்களின் விலையை குறைக்க வேண்டும்

ks alagiri
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ப.சிதம்பரத்தை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1200-க்கு விற்ற டி.ஏ.பி., 50 கிலோ உரம் தற்போது ரூ.1900 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல, ரூ.900-க்கு விற்ற காம்ப்ளக்ஸ் உரங்கள் 20:20 ரூ.1350, ரூ.1175-க்கு விற்ற 10:26:26 உரம் ரூ.1775, ரூ.900-க்கு விற்ற 15:15:15 உரம் ரூ.1500, ரூ.1200-க்கு விற்ற 12 : 32 : 16 உரம் ரூ.1800 என விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து விவசாயத் தொழிலையே விட்டு வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக அனைத்து உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளை கடுமையாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருளுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களால் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் விளை பொருள் என்ன விலைக்கு விற்கும் என்று ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது சந்தை முடிவு செய்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

விவசாயிகள் சந்தை என்பது இன்றைக்கு அம்பானி, அதானி கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் தொழிலதிபர்களின் ஆதாயத்திற்கு தான் வேளாண் சட்டங்களே கொண்டு வரப்பட்டிருக்கிறது.

எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.