கேரளாவில் இன்றுமுதல் 144 தடை உத்தரவு அமல்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இன்றுமுதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதன்முறையாக 5 ஆயிரத்தை தொட்ட தினசரி நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.கடந்த 30ம் தேதி நோயாளிகளின் எண்ணிக்கை 8,830 ஆகவும், நேற்று முன்தினம் 8,135 ஆகவும் இருந்தது.

நேற்று இது 9,258 ஆக உயர்ந்து 10 ஆயிரத்தை எட்டும் நிலையில் உள்ளது. நேற்று 4 மாவட்டங்களில் 1,000க்கும் மேல் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக நிபந்தனைகளை கடுமையாக அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 9 மணிமுதல் கேரளா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

ஆனால் காசர்கோடு மாவட்டத்தில் வரும் 9ம் தேதிவரை மட்டுமே தடை உத்தரவு அமலில் இருக்கும்.தடை உத்தரவின்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. 5 பேருக்கு மேல் கூடும் ஏந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. ஆனால் திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச்சடங்கில் 25 பேரும் கலந்து கொள்ளலாம். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கடைகள் வழக்கம்போல திறந்திருக்கும். அலுவலகங்கள் ெசல்வதற்கோ, பஸ் உட்பட வாகனங்களுக்காக காத்திருக்கவோ தடையில்லை. ஆனால் கடைகள் மற்றும் ஓட்டல்களில் 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை. அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இந்த தடை உத்தரவின் நிபந்தனைகளை மேலும் கடுமையாக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ேமலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மருத்துவ தேவைகள் தவிர பிற காரணங்களுக்காக வெளியே செல்ல முடியாது.

இதுபோல இம்மாதம் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது எனவும் அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில், 90 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தும், 54 பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும் இன்று முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ேகரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் அதிகரிக்கப்படும். அரசாங்க நிகழ்வுகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். கடைகளில் கையுறைகள் அணிந்து பொருட்கள் வாங்க செல்ல வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here