புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

மத்திய அரசின் அறிவித்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் , இன்று காலை சிறப்பு கேரள சட்டசபை கூடியது. மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது ஆகும்.

இது கேரளாவைக் கடுமையாகப் பாதிக்கும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே உள்ள இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார். இந்த தீர்மானத்திற்குக் கேரள சட்டசபையில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவான ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார்.

தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர். இறுதியில் பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.