இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய, புதிய வகை கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன. எனினும் பல்வேறு நாடுகளில் இந்த புதியவகை கொரோனா பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல, அமெரிக்காவில் ஒருவர் புதிய வகை கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றி கூறியுள்ள விஞ்ஞானிகள் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை அல்ல என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று 20 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது 25 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சம் அடையத் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ரதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு வந்த நபருக்கு, புதிய வகை கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் புதிய வகை கொரோனா பாதித்த நபர் இல்லை என்று கூறினார். அத்துடன், புத்தாண்டு காலத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கு முன்னரே உருமாறிய கொரோனா இந்தியாவிற்குள் வந்திருக்கு வாய்ப்பு இருப்பதாக எய்ம்ஸ் இயக்குனர்  குலேரியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.