காசுக்கு விற்கப்படும் கலைமாமணி விருது

தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது பணத்திற்கு விற்கப்படுவதாகச் சங்கத்தின் மாநில தலைவர் சத்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக அரசால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது மாவட்டத்திற்கு ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5,000 பேர் உள்ளனர். இந்த விருது பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே விற்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களுக்கான வாரியம் செயல்படாமல் உள்ளது. இதனை அரசு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைப் பலமுறை அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். எதையுமே அரசு நிறைவேற்றவில்லை. விரைவில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள இரண்டு லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்களும் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிப்போம் என்றார்.