Lightning Strike: ஒரே நாளில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

Lightning Strike: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையின்போது, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் கருப்பசாமி நகரில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சதீஷ் என்பவரின் வீட்டில் கட்டுமானப் பணியை செய்துகொண்டிருந்த ரோசல்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முருகன், ஜக்கம்மா மற்றும் ஜெயசூர்யா ஆகிய 4 பேர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் நால்வரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதேபோல், கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராமத்தில் ஏரியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஜெயக்கொடி என்பவர் மீதும், மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். அத்துடன் ஜெயக்கொடியின் நான்கு ஆடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதேபோன்று திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் நேற்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வேலை பார்த்து வந்த அபர்நாத் என்ற 23 வயது இளைஞர் பலத்த காயமடைந்தார்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் கரிவேடு பகுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக மரத்தின் அடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது மின்னல் தாக்கியதில், அவர்களில் குணசேகரன் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீபன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 7 பேருக்கும் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தாருக்கு ரூ, 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Fishing: மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு துவங்குகிறது