உண்மையில் இருதயம் மிகவும் மென்மையானதுதான். நமது கைமுட்டி அளவுதான். பெண்களுக்கு 250-300 gm மற்றும் ஆண்களுக்கு 300 -350 gm தான் இருக்கும். மிகவும் பத்திரமாக நெஞ்சு கூட்டுக்குள் வைக்கப்பட்ட உறுப்பு.
பெரிகார்டியும் எனும் இரண்டு லேயரால் ஆன கவரிங்கும் உள்ளது. இந்த பெட்டகத்துக்குள் வைக்கப்பட்ட பொக்கிஷத்தை நாம் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?
நாம் நமது தீயபழக்க வழக்கங்களால் எவ்வாறு நமது இதயத்தை சீரழிக்கிறோம் என்பதை யோசனை செய்ய வேண்டும் .
நம்மால் மாற்ற முடியாதவை
- வயது – வயதினால் இரத்தக் குழாய்கள் கடினமாக ஆகும். இரத்த ஒட்டம் மெதுவாக இருக்கும்
- குடும்ப வரலாறு – பரம்பரையாக இருதய நோய் இருப்பது.
இவை நம்மால் ஒன்றும் செய்ய முடியாத போதும், இதனை மனதில் கொண்டு இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
நம்மால் மாற்றக் கூடியவை
- புகைப்பிடித்தல்
- உடற்பருமன்
- தீய உணவுப்பழக்கம்
- உடற்பயிற்சி இல்லாமை
- குறைவான தூக்கம்
- மன அழுத்தம்
மருத்துவ உபாதைகள்
- சர்க்கரை வியாதி
- இரத்த அழுத்தம்
- சிறுநீரக கோளாறுகள்
- முடக்கு வாதம்
- மன நோய்க்கான மருந்துகள் சில
இவை அனைத்தும் உள்ள போது, இருதயத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாரடைப்பு – நெஞ்சு வலி, தாடை வலி, தோள் வலி, இடது கை வலி ஆகியவை இருந்தால் உடனே ஈசிஜி (ECG) செய்து கொண்டு, அதற்கான ரிபோர்டுடன் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். சில சமயத்தில் ஈசிஜி ரிப்போர்ட் நார்மலாக இருந்தாலும், நோயாளிக்கு
நெஞ்சு வலி இருந்தால், Trop என்கிற இரத்த பரிசோதனை மூலம் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும்.
அல்லது நோயாளியை மருத்துவர் கவனிப்பில் வைத்திருந்து 6 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு ஈசிஜி செய்ய வேண்டும். இவ்வாறு மருத்துவர் கவனிப்பில் நாம் இருந்தால், இருதய கோளாறுகளில் இருந்து குணம் பெற முடியும்.
வாழ்க்கை முறையை சீரமைப்பதன் மூலமாகவும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலமாகவும், நமது இருதயத்தை சீரான முறையில் பாதுகாக்கவும் மற்றும் கோளாறு தீவிரம் அடையும் முன்னர் சரி செய்து கொள்ளவும் முடியும்.

எழுத்து: Dr.அகிலா ரவிக்குமார்
கன்சல்டன்ட் பிசிஷியன்
மெடால் டயஆக்னோஸ்டிக்ஸ்



