அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பு மருந்து – கிரேக்க பிரதமர் உறுதி

கரோனா தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தவுடன் கிரீஸ் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கரோனா தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தவுடன் முதலில் எந்த மக்களுக்கு அவை கிடைக்க வேண்டும், எவ்வளவு சீக்கிரம் மற்றவர்களுக்கும் தடுப்பு மருந்தை வழங்க முடியும் போன்றவற்றைப் பல்வேறு நாடுகளும் திட்டமிடத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், கிரீஸ் நாட்டில் கரோனா தடுப்புமருந்தை எவ்வாறு விநியோகிக்கலாம் என்பது குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை அந்நாட்டில் பிரதமர் கிரியாகோஸ் கூட்டினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா தடுப்பு மருந்து அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். எனவே, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் இந்தத் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்” என்றார்.

கிரீஸ் நாட்டில் வியாழக்கிழமை மட்டும் 3,300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. மேலும் 50 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.