பொருளாதார மறு சீரமைப்பு: பொதுத்துறை நிறுவன நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் மூலதன செலவுகளைப் பற்றிய நான்காவது ஆய்வுக் கூட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நடத்தினார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மத்திய நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் இந்த அமைச்சகங்களை சார்ந்த 14 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் கூட்டமொன்றை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தினார்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் மூலதன செலவுகளை ஆய்வு செய்வதற்காக நடைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்றை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு பங்குதாரர்களுடன் நிதியமைச்சர் நடத்திவரும் கூட்டங்களின் வரிசையில் இது நான்காவது ஆகும்.

இந்த 14 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான 2019-20-ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் இலக்கான ரூபாய் 1,11,672 கோடியில், 104 சதவீதமான ரூபாய் 1,16,323

கோடியை அடைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2020-21-க்கான இலக்கு ரூபாய் 1,15,934 கோடி ஆகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன், இந்நிறுவனங்களின் மூலதன செலவு என்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியமான அங்கம் என்றும் நிதியாண்டுகள் 2020-21 மற்றும் 2021-22-இல் இது அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்புடைய அமைச்சகங்களின் செயலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்குமாறு வலியுறுத்திய அமைச்சர், இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை வகுக்குமாறு கூறினார்.