இஸ்ரோவுக்கு எலான் மஸ்க் வாழ்த்து..!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முக்கிய பகுதியான அதன் விகாஸ் என்ஜின் வெற்றிகரமாக புதனன்று பரிசோதிக்கப்பட்டது. அதற்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் மகேந்திரகிரி வளாகத்தில், நேற்று (ஜூலை 14) ககன்யான் திட்டத்திற்காக, மனிதர்களை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ஏவுகணைக்கான விகாஸ் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 4 நிமிடங்கள் என்ஜினை பரிசோதித்தனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோ பகிர்ந்திருந்தது.

அதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் இஸ்ரோவின் முயற்சிக்கு, இந்திய தேசியக் கொடியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டுக்களை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம், விண்வெளி பயண செலவை குறைப்பது போன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. தனக்கு போட்டி நிறுவனமாக இஸ்ரோ உள்ள போதும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் 2022-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவிட் தொற்று காரணமாக குறித்த காலத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படுமா என்பது தெளிவில்லாமல் உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் மனிதர்களை புவியின் தாழ் வட்டப்பாதைக்கு இந்திய ஏவுகணையான ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 மூலம் அனுப்பி, மீண்டும் அவர்களை பூமிக்கு கொண்டு வந்து இந்தியாவின் திறனை நிரூபிப்பதாகும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறுகின்றனர்.