தி.மு.க. வேட்பாளர்கள் 10-ந்தேதி அறிவிப்பு

கடந்த 2-ந்தேதியில் இருந்து அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வந்தது. நாளையுடன் நேர்காணல் முடிவடைகிறது.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை அழைத்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தலின் போது செயல்படுத்த வேண்டிய யுக்திகளையும் விளக்கினார்.

சட்டசபை பொதுத்தேர்தல் நெருங்கி விட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகம் பேர் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களை நேரில் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தேன்.

நேர்காணல் நாளையுடன் முடிவடைவதால் வேட்பாளர் பட்டியல் தயாராகி வருகிறது. வருகிற 10-ந்தேதி நல்ல வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வரும். நீங்கள் அனைவரும் அந்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்.

எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பது இயலாத காரியம். எனவே நான் நிற்பதாக கருதி ஒவ்வொரு வேட்பாளரையும் நீங்கள் வெற்றி பெற செய்ய கடுமையாக பாடுபட வேண்டும். 11-ந்தேதி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.