கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் ஏற்படுத்துமா?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் 18 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு (ஏஇஎப்ஐ) தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் ரத்த உறைதல், ரத்தக்கசிவு அரிதாகவே உள்ளது. மொத்தம் 753 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக குறைவாகவே உள்ளது.கோவாக்சின் தடுப்பூசியால் ரத்த உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடும் எனக் கருதுவது முற்றிலும் தவறானது. அனைவரும் தங்களைத் தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.