ஆந்திர மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை ஊரடங்கு

ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அலுவலகம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூன் 9ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மளிகைக் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7ம் தேதிகளில் திறக்கலாம், தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக கடைகள் மற்றும் ஸ்டேசனரி கடைகள் ஜூன் 1ம் தேதி மட்டும் திறக்கலாம் என அமைச்சர் சுபோத் உனியால் தெரிவித்தார்.

கொரோனாவால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை அரசு வழங்கும் என்றும் உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.