7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடுமுழுவதும் 29,689 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவிட் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கேரளாவில் 7, மணிப்பூரில் 5, மேகாலாயாவில் 3 மாவட்டங்கள் அடங்கும்.

மேலும், நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி 100 பேருக்கு மேல் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கோவிட்டிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கோவிட் பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரங்களில் ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.