பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முகநூலில் வருவதை பார்த்துவிட்டு மக்கள் பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீராவி முறையை பொது இடங்களில் யாரும் செய்ய வேண்டாம். பொது இடங்களில் ஒரே நேரத்தில் பலர் ஆவிப்பிடிப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவர்களின் அனுமதி இல்லாமல் முகநூலில் வருவதை பார்த்து விட்டு யாரும் சுயமாக புகை போடுதல் கூடாது. மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் சுய வைத்தியம் எடுத்து கொள்வது மிகவும் தவறு. வாயை திறந்து மூடும் போது கிருமிகள் அருகில் உள்ளவர்களுக்கும் எளிதாக பரவும். புகைப்போடுதல் மூலம் அழுத்தமான காற்று வாய் வழியாக சென்று நுரையீரலில் எளிதில் பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.