புதிய உருமாறிய கரோனாவுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படும்!

கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில், மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அவசர கால பயன்பாட்டிற்கு விடப்பட்ட நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே, நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களில் 5,000 மரபணு வகைப்படுத்தும் சோதனைகனை மேற்கொண்டுவிட்டோம் என தெரிவித்தார்.

கோவிட் – 19 மற்றும் உருமாறிய கரோனா வைரஸை வகைப்படுத்தும் மரபியல் சோதனைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள 10 அரசு ஆய்வகங்களை ஒருங்கிணைத்து INSACOG என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பயோடெக் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இது இயங்கும்” என்றார்.

பின்னர் பேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன், “பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனாவுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படும் என கூறினார்.