டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி கொரோனா தடுப்பூசி தயார்

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 20 முதல் 30 கோடி கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் தயாராக இருக்கும்’ என்று சீரம் இன்ஸ்டிடியூட்டின் (எஸ்ஐஐ) நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

உலகையே முடக்கி வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீள, பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவை தடுக்க கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது. தற்போது இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ், ஹீல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘பார்மா எக்சலன்ஸ்’ மின்னணு உச்சி மாநாட்டில் கூறியதாவது: சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா, ‘ஆண்டுக்கு 70 கோடி முதல் 80 கோடி ‘டோஸ்’ வரையில் தடுப்பூசியை உற்பத்தி செய்கிற ஆற்றல் சீரம் நிறுவனத்துக்கு இருக்கிறது’ என்று கூறி இருக்கிறார். சீரம் நிறுவனம், இன்னும் கூடுதலான ‘டோஸ்’ தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். தடுப்பூசி உற்பத்தி செய்கிற 3 மருந்து நிறுவனங்களை பெற்றிருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம். அவற்றில் இரண்டு நிறுவனங்கள், தடுப்பூசியின் 3வது இறுதிக்கட்ட சோதனையை நடத்துகின்றன. மற்றொரு நிறுவனம், இரண்டாவது கட்ட பரிசோதனையை நடத்துகிறது.

எங்களது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகள், டிசம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் கிடைத்து விடும். தடுப்பூசி உரிமம் பெறுவதற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்படும். பொதுவாக ஒரு தடுப்பூசி சந்தைக்கு வருவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரையில் ஆகும்.

ஆனால், கொரோனா தடுப்பூசி மிக சீக்கிரமாக தேவைப்படுகிறது. ஏற்கனவே 2009ல் ‘எச்1என்1 புளூ’ (பன்றி காய்ச்சல்) வந்த போது தேவைப்பட்ட போது, அதே ஆண்டின் டிசம்பரில் வந்து விட்டது. அதேபோல், எபோலா வரைஸ் ஆப்பிரிக்காவில் தொற்றிய போது, அதற்கான

தடுப்பூசி இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையின்போது சந்தைக்கு வந்து விட்டது. ஆனால் முதல் முறையாக கொரோனா வைரசை பற்றி பல நாடுகளுக்கும் எதுவும் தெரியாது. இந்தியாவில் டிசம்பர் இறுதியில் 20 கோடி முதல் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகிவிடும் என்றார்.