தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் !

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி தலா ரூ.1 லட்சத்தை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த நபரின் 72 வயது தாயாருக்கு ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார். அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.