அமெரிக்காவின் இன்னொரு ரத்தவெறி கொலை சம்பவத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் மேற்கு அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சரமாரித் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் அந்த இடமே போர்க்களமாகி 10 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பலியானவர்களில் எரிக் டாலி என்ற போலீஸ் அதிகாரியும் அடங்குவார். டென்வர் அருகே பூல்டரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இந்த அதிர்ச்சிச் சம்பவத்துக்கு முதலில் வினையாற்றியவர் இந்த போலீஸ் அதிகாரி எரிக் டாலிதான்.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் வெள்ளை நடுத்தர வயது மனிதர் ஒருவர் சட்டையில்லாமல் உடல் முழுதும் ரத்தாபிஷேகம் செய்தது போல் இருந்த காட்சி பலரையும் பீதிக்குள் ஆழ்த்தியுள்ளது. இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக பூல்டர் பகுதி போலீஸ் உயரதிகாரி யாமகுச்சி தெரிவித்தார். எத்தனை பேர் பலியானார்கள் என்ற முழுவிவரத்தை அவர் இன்னும் அளிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது, இதன் காரணம் என்னவென்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



