தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்த நாளை பொது விடுமுறை நாளாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தைப்பூச திருநாளை தமிழக அரசு பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை பரிசீலித்து ,வரும் ஜனவரி 28ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



