பழையன கழிதலும் ,புதியன புகுதலும் – போகி பண்டிகை கொண்டாடி மகிழுங்கள் !

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் வருவது போகி திருநாள்.இது மார்கழி மாதத்தின் கடைசி நாள்.பழையன கழிதலும் ,புதியன புகுதலும் என்ற சொல்லுக்கு ஏற்ப அந்த கால தமிழ் ஆண்டின் கடைசி என்பதால் ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளுக்குகாக நன்றி தெரிவிப்பதே இந்த நாளின் சிறப்பு.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை நீக்கி வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அதேபோல் , வீட்டில் இருக்கும் தேவையற்ற குப்பைகள் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இன்று அதிகாலையில் எழுந்து வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிடவேண்டும்.வீடு வாசலில் , பூலாப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம் கட்ட வேண்டும்.அடுத்து தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர்.