கருப்பு பூஞ்சை தொற்று மருந்தின் விலை என்ன தெரியுமா?

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தின் விற்பனை வரும் 31ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய போக்குவரத்து மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, அடுத்த பிரச்சனையாக, கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்களை கருப்பு பூஞ்சை என்னும் தொற்று தாக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சர்க்கரை அளவில் மாறுபாடு உள்ளவர்களையும் இந்தத் தொற்று எளிதில் தாக்கி வருகிறது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தென்பட்டு வருகிறது.

இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலம் வர்தா ஜெனிடிக் லைப் சைன்ஸ் நிறுவனம் கருப்பு பூஞ்சைக்கான மருந்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், மேலும் 5 நிறுவனங்களுக்கு கருப்பு பூஞ்சைக்கான மருந்தை தயாரிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அதேவேளையில், கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தின் விலை ரூ.1,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 31ம் தேதி முதல் இந்த மருந்தின் விற்பனை தொடங்கும் என்று மத்திய போக்குவரத்து மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.