அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த நாடோடிகள் படத்தில் நடித்தவர் சாந்தினி. அவர், மலேசியா குடியுரிமை பெற்றவர். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘மணிகண்டனுடன் கடந்த 5 ஆண்டுகளாக நான் உறவில் இருந்துள்ளேன். மனைவியை விவகாரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். பலமுறை இருவரும் உடலுறவில் ஈடுபட்டதால், நான் 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன்.

மணிகண்டனுடன் சட்டசபை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளேன். அவருக்கான அரசு பங்களாவில் இருந்துள்ளேன். தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று ஆள் வைத்து மிரட்டினார். என்னுடைய நிர்வாணப் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அப்போது, அ.தி.மு.க ஆட்சிக் காலம் என்பதால் என்னால் புகார் அளிக்க முடியாமல் இருந்தது. தற்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளதால் துணிந்து புகார் அளித்துள்ளேன்’ என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், மணிகண்டனுடன் தோள்மீது சாய்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 323 காயம் ஏற்படும் வகையில் தாக்குதல், 417-வது பிரிவு நம்பிக்கை தந்து ஏமாற்றுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.