ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி

ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்கக் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

அது நடக்காததால், அதிருப்தி தலைவராக மாறினார். பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட்டுக்கு எதிராகத் திரும்பினார். ஆனாலும், முதல்வர் கெலாட்டுக்கு மெஜாரிட்டி இருந்ததால், ஆட்சி தப்பியது.

குறிப்பாக, காங்கிரஸ் அமைச்சர்களின் தொகுதிகள் உள்ள முக்கிய நகரங்களில் அந்த கட்சி தோற்றுள்ளது.பாஜக வெற்றியை அடுத்து பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறுகையில், வெற்றி பெற்ற பாஜகவினருக்கு வாழ்த்துக்கள். அசோக் கெலாட் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டத்தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாஜக மீதுதான் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றார்.