பாஜக தலைவர் நட்டா இன்று கேரளா வருகை

சட்டமன்ற தேர்தலில் இந்த முறை கேரளாவில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார்.

மேற்கு வங்கம் உட்பட மற்ற மாநிலங்களைப் போல கேரளாவில் மற்ற கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் யாரும் பாஜகவுக்கு வர வாய்ப்பில்லை. இதனால் சிறுபான்மை ஓட்டுகளைக் கவர பாஜக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பாஜக தேசிய தலைவர் இன்று கேரளா வருகிறார்.

முதலில் திருவனந்தபுரம் வரும் அவர், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து நாளை திருச்சூர் செல்லும் அவர், மத்திய கேரள பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை மாலை திருச்சூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.