மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வீட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

ஆத்தூர் அருகே மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முதல் சோதனை செய்து வருகின்றனர். அந்த சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெங்கடாசலத்தின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக நடந்த சோதனையில் 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேரடி வீதியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

மேலும் அவரது சொந்த கிராமமான அம்மம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால் வெங்கடாசலம் சென்னையில் குடியிருந்து வருவதால் பூர்வீக வீட்டில் தற்போது யாரும் இல்லை.

பூட்டியிருந்த வீட்டை அவரது அண்ணன் மகன் பாலாஜி என்பவர் மூலம் வீட்டை திறக்க சொல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். வெங்கடாசலம் வனத்துறை அதிகாரியாக இருந்து, கடந்த 2018-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி பெற்றார்.

இதையும் படிங்க: பாலியல் அத்துமீறல்: பெண்களின் ஆடைகளைத் துவைக்க வேண்டும்