இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை -முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார். பிறகு, உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அப்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளது. மேலும், பலாத்காரத்தின் போது அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூரன்கள் கடித்து கடுமையாக சேதப்படுத்தி விட்டனர்.

அந்த பெண். அலிகார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்து விட்டன. கைகள் பாதியளவு முடங்கி விட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. அவரை காப்பாற்ற முடியவில்லை,’ என்றனர். இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உள்துறை செயலாளர் பகவான் ஸ்வரூப் ,துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்திரபிரகாஷ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி பூனம் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

பெண்ணை வன்கொடுமை செய்து கொன்றது யாராக இருந்தாலும் தப்ப விடமாட்டோம். விரைவான நீதியை உறுதி செய்ய, இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசியில் என்னிடம் அறிவுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here