அதிமுக முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்சா? ஓ.பி.எஸ்சா?

பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று செயல்பட்டது. தொடர்ந்து இரண்டு அணியினரும் ஒன்றிணைந்தனர். ஓ.பி.எஸ்.க்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இரண்டு அணியினரும் ஒன்றிணைந்த பின்னரும் கட்சிக்குள் இபிஎஸ், ஓபிஎஸ் அணி என்றே செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவுக்குள் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் தொடர்ந்து பேட்டியளிக்கும்போது எல்லாம் கூறி வந்தனர். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இது, அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. அதைத் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று ஓ.பி.எஸ்., இபிஎஸ் கூட்டறிக்கை மூலம் எச்சரித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 293 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 293 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர், அதிமுக பொதுச்செயலாளர், சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பொதுக்குழுவை கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். இதனால், பொதுக்குழு கூடும் தேதியும் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழுவில் அறிவிக்கப்படலாம்?. அது மட்டுமல்லாமல் செயற்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here