அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி- பள்ளிகல்வித்துறை முக்கிய உத்தரவு

2020-21ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் அச்சிடப்படும் இடத்தில் தேர்ச்சி என மட்டும் பதிவு செய்து வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 25ந் தேதி சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2020-21ம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் 9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு மற்றும் 10,11 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர் எனவும், பள்ளிகளில் இருந்து இவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2020-21 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு பயின்ற அனைத்து தேர்வர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வர் அனைவரும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என சான்றளிக்கப்படுகிறது என்ற வாசகத்தை அச்சிட்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான காலத்தில் மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி என பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்படும் என கூறியுள்ளார்.