Palani Thaipusa festival: பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

பழனி: Thaipusa festival begins today with flag hoisting in Palani. பழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் 3ம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 9.30மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர். பிப்ரவரி 3ம்தேதி மாலை தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து அன்று இரவு 4 ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், பிப்ரவரி 4ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

மேலும் இன்று முதல் தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வருகிற பிப்ரவரி 7ம்தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.