பெங்களூரு: Pilgrimage to Kashi : பிரதமர் நரேந்திர மோடியால் புதுப்பிக்கப்பட்ட புனித தலம் காசிக்கு அதிக அளவில் பக்தர்கள் யாத்திரை செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மானியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரு விதானசௌதா மாநாட்டு அரங்கில், அறநிலையத் துறை சார்பில் வியாழக்கிழமை காசிக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவிகள் வழங்கி, பணப்பரிவர்த்தனையை துவக்கி, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: அண்மையில் பிரதமர் மோடியால் (Prime Minister Modi) புனித தலம் காசி புதுப்பிக்கப்பட்டது. முன்பெல்லாம் காசிக்குப் போனால், அங்குள்ள சூழ்நிலையால் சலித்துப் போய்விடும். ஆனால் இப்போது நூறு சதவீதம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பக்தி பரவசத்தை ஏற்படுத்துகிறது.
காசிக்கு யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமைச்சர் சசிகலா ஜொள்ளேவின் (Minister Sasikala Jolle) முயற்சியால் காசி யாத்திரிகளுக்கு உதவ ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளார். இதில் நேரடி பணப் பரிமாற்றத்திற்கான டிபிடி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால், பக்தர்கள் யாத்திரை செல்வது அதிகரிக்கும். மாநிலத்தில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் காசிக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மானியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இதற்கு ரூ. 693 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எளிமையாக்கி, பக்தர்கள் பயனடையும் வகையில் இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது. காசி யாத்திரைக்கு தேவையான ஆவணங்களை இணையதளத்தின் உதவியுடன் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரரின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ரூ. 5 ஆயிரம் மானியம் நேரடியாக டிபிடி மூலம் டெபாசிட் செய்யப்படும். காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் மற்றும் அரசு மானியத்திற்கு விண்ணப்பிக்கும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி உரிய ஆவணங்களை துறை சார்ந்த இணையதளமான https://itms.kar.nic.in/ மற்றும் sevasindhu.karnataka.gov.in என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.



