World Rhino Day at Vandalur Zoo: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக காண்டாமிருக நாளை கொண்டாடிய இந்தியன் ஆயில் இயக்குநர்

சென்னை: Director of Indian Oil celebrated World Rhino Day at Vandalur Zoo. வண்டலூர் உயிரியல் பூங்காவில் தத்து எடுக்கப்பட்ட காண்டாமிருகங்களுடன் உலக காண்டாமிருக நாளை இந்தியன் ஆயில் இயக்குநர் கொண்டாடினார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் உலக காண்டாமிருக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா ஆகிய ஐந்துவகை காண்டாமிருகத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக காண்டாமிருக தினம் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தத்து எடுக்கப்பட்ட காண்டாமிருகங்களுடன் உலக காண்டாமிருக நாளை இந்தியன் ஆயில் இயக்குநர் கொண்டாடினார்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுற்றுச்சூழல் சமன்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மக்களுக்கு தரமான வாழ்க்கைச் சூழலைத் தரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இனத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளது.

உலக காண்டாமிருக தினத்தையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்துதல்) திரு வி. சதீஷ் குமார் கலந்து கொண்டு, பார்வையாளர்களுக்கு காண்டாமிருக பாதுகாப்பு தொடர்பான கையேடுகளை வழங்கினார். காண்டாமிருகங்கள் வசிக்கும் பகுதியை நன்கு பராமரித்து வரும் அதிகாரிகளுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகில் அருகி வரும் இனமான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை கடந்த ஆண்டு முதல் இந்தியன் ஆயில் நிறுவனம் தத்தெடுப்பதன் மூலம் தாங்கள் மேற்கொள்ளும் நல்லெண்ண நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய இயக்குநர், இதுதொடர்பாக சில்லரை விற்பனை நிலையங்களில் பதாகைகள் வைத்திருப்பதையும், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

உலக காண்டாமிருக தினத்தையொட்டி, நிறுவனத்தின் தலைவர் திரு எஸ்.எம்.வைத்யா, இந்தியன் ஆயில் நிறுவனம், தனது விற்பனையுடன், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்தல் ஆகிய பொறுப்புகளை செவ்வனே செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் ஆபரணத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக, நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.