National Award for Women: மகளிர் சக்தி விருது பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்பு

File Picture

புதுடெல்லி: “Nari Shakti Puruskars”- National Award for Women. தேசிய மகளிர் சக்தி விருது பெறுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “மகளிர் சக்தி விருது” அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மகளிருக்காக தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக “மகளிர் சக்தி விருது” என்னும் மகளிருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு – சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு “மகளிர் சக்தி விருது” என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான சேவை புரியும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் “மகளிர் சக்தி விருது” (நாரி சக்தி புரஸ்கார்) என்னும் தேசிய விருதுக்காக விரிவான வழிகாட்டு நெறிமுகைள் ஒன்றிய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் https://wcd.nic.in/schemes/nari-shakti-puraskar என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகுதிவாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணைதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் www.awards.gov.in என்ற இணையதளம் வழியாக சமர்ப்பிக்க 31.10.2022 இறுதி நாளாகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் அவர்களால் தேசிய விருது வழங்கப்படும்.