Sudden protest by students in Tindivanam: திண்டிவனத்தில் மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

திண்டிவனம்: At Tindivanam Adi Dravidar Hostel, students staged a sit-in protest demanding basic facilities. திண்டிவனம் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் பயின்று வரும் மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் உணவை சாப்பிட மறுத்து மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசாரும் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. எனவே நாங்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இந்த விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு தாசில்தார் வசந்தகிருஷ்ணன், இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதனை ஏற்ற மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து உணவை சாப்பிடச் சென்றனர்.

விடுதியில் திடீரென மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டதால் சகஜ நிலைக்கு திரும்பியது.