B.S. Yedyurappa : சட்டப்பேரவைத் தேர்தலில் 140 இடங்களில் வெற்றி பெறுவோம்: பி.எஸ். எடியூரப்பா

சிவமொக்கா: We will win 140 seats in assembly elections: கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 140 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ள முன்னாள் எம்பி முத்தேஹனுமேகௌடா (Former MP Muthehanume Gowda), விரைவில், பாஜகவில் இணைய‌ உள்ளார். அண்மையில் என்னை சந்தித்த அவர், பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தார். அவர் மட்டுமின்றி மேலும் பலர் பாஜகவில் இணைய உள்ளனர். பாஜகவில் இணைபவர்களின் தகுதிக்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்படும். யாரிடமும் நாங்கள் தேர்தலில் டிக்கெட் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. பாஜகவில் இணைய உள்ளவர்கள் உரிய நேரத்தில், தக்கப் பதவிகள் வழங்க கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். கட்சியின் கட்டளையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேசிய அளவில் ஆட்சி மன்றக்குழுவில் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 140 இடங்களில் வெற்றி (Victory in 140 seats) பெறுவதற்கான முயற்சி மேற்கொள்வோம். பிரதமர் நரேந்திரமோடியும் மாநிலத்தில் 140 இடங்களில் வெற்றி பெறுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளார். கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும் போது பிரசாரத்திற்கு வருவதாக பிரதமர் வாக்களித்துள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாடுபடுவோம்.

கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால், தேதியை நிர்ணயித்து, விரைவில் சிவமொக்காவில் பாஜக மாநாடு நடத்தப்படும் (BJP conference will be held in Sivamokka). அந்த மாநாட்டில் சுமார் 1 லட்சம் பேரை கூட்டுவோம். பிரதமர் மாதம் ஒரு முறை மாநிலத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார். அவரையும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். மாநிலத்தில் பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே ஆட்சியை குறை கூறி வருகின்றனர். யார் எங்களை குறை கூறினாலும் வரும் தேர்தலில் மாநிலத்தில் 140 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்றார் அவர்.