Flood warning: 105 அடியை நெருங்கிய பவானிசாகர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: For the 4th time, the water level in Bhavanisagar dam is close to 105 feet. பவானிசாகர் அணையில் 4-வது முறையாக நீர்மட்டம் 105 அடியை நெருங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளவு 105 அடி ஆகும். இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 105 அடியை நெருங்கி வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 966 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் 1,750 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9 ம் தேதி அணையின் நீர்மட்டம் 105 அடியையும், 2020-ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி 105 அடியையும், 2021-ம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி அணையின் நீர்மட்டம் 104.85 அடியையும் எட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று (21.12.2022) காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 104.90 அடியை எட்டியுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் பொதுப்பணித்துறை சார்பாக அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை செல்லும் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.