Sudden pothole on Villupuram road: விழுப்புரம் சாலையில் திடீர் பள்ளம்; பொதுமக்கள் அதிர்ச்சி

விழுப்புரம்: Villupuram Puducherry road shocked people with a sudden pothole. விழுப்புரம் புதுச்சேரி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இச்சாலை, எந்நேரமும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டம் மிகுந்தும் காணப்படும். இந்நிலையில் அந்தச் சாலையில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென சாலையில் 6 அடி பள்ளம் ஏற்பட்டது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினுள் பொதுமக்கள், மரக்கிளையை நட்டும், அந்த பள்ளத்தை சுற்றிலும் செங்கல் வைத்தும் தற்காலிகமாக தடுப்புகளை அமைத்தனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக பொதுமக்கள் பார்த்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து வந்து பேரிகார்டுகள் மூலம் தடுப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். ஏற்கனவே அப்பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மண் உள்வாங்கி, ராட்சத பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 2 பொக்லைன் எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றிலும் 10 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டு வலுவான கட்டமைப்புடன் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை பார்வையிட்ட நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில், இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

இந்தப் பள்ளம் விழுப்புரம் நகராட்சி பகுதியில், கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் தோண்டப்பட்ட பள்ளத்தின் மேல் போடப்பட்ட சாலை என்பதால் அங்கு மண் உள்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர் விழுப்புரத்தில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டி சிதலமடைந்துள்ள சாலைகளை தரமான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளது

மேலும் விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு சாலைகளை அமைப்பதற்கு, கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் வந்திருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு, நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்தார் அதனால் சாலைகளை விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் தரமான முறையில் இது போன்று உள் சாலைகளும் உள்வாங்காமல் இருக்கும் வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என விழுப்புரம் நகராட்சியின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் கோரிக்கை வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.