Veerappan associates released: கோவை சிறையிலிருந்து வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை

கோவை: 2 associates of Veerappan released from Coimbatore jail. கோயம்பத்தூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழக-கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், தமிழக சிறப்பு அதிரடிப்படையால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாக அவரது கூட்டாளிகள் பல பேர் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 1987ம் ஆண்டு வனச்சரகராக பணிபுரிந்த சிதம்பரம் என்பவரை கொலை செய்த வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன், பெருமாள், ஆண்டியப்பன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணையில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர்.

சிறையில் 35 ஆண்டுகள் இருந்த வீரப்பன் அண்ணனான மாதையனை விடுவிக்குமாறு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், அவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார். அவரது விடுதலை தொடர்பான பரிந்துரை உடனடியாக ஏற்கப்பட்டிருந்தால் சிறையில் மாதையன் மரணம் அடைந்திருக்க நேர்ந்திருக்காது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாதையன் உயிரிழந்த நிலையில், பெருமாள், ஆண்டியப்பனை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று 30 ஆண்டுகளாக சிறையிலிருந்த ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த நிலையில், கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இரண்டு பேரை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, அதற்கான கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டதால் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கோரிக்கைக்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் அவர்கள் இருவரும் கோவை சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.