Valvil Ori Festival Holiday: வல்வில் ஓரி திரு விழா: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாமக்கல்: Valvil Ori Festival Holiday: கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு 3.8.2022 அன்று புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஎழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2022 மற்றும் 3.8.2022 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவின் போது அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சிகள், மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவமாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், வரும் 3.8.2022-ஆடி மாதம் 18-ஆம் நாள் புதன் கிழமை அன்று வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளதால், 3.8.2022 ஆம் நாளன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 27.8.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம், 1881 (Under Negotiable Instruments Act 1881 ) – இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளான 3.8.2022 அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவ்விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு:

கொல்லிமலையில் நடைபெறும் ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் சேலத்திலிருந்து மேட்டூர், பவானி, கந்தாசிரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை ஆகிய பகுதிகளுக்கும், நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர், கொடுமுடி, மோகனூர் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

இதேபோல், திருச்செங்கோட்டிலிருந்து கொடுமுடி, பவானி பகுதிகளுக்கும், சங்ககிரியிலிருந்து பவானிக்கும், ராசிபுரத்தில் இருந்து காரவள்ளி, கொல்லிமலை பகுதிகளுக்கும், காரவள்ளியிலிருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கும், எடப்பாடியிலிருந்து மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் பகுதிகளுக்கும், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.