College admission Rank list: கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: College admission Rank list to be released tomorrow: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பித்து வந்த நிலையில், 27-ந் தேதி மாலையுடன் அவகாசம் முடிவடைந்தது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் மாணவர்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல், சென்னை பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஜூலை 22ஆம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஐந்து நாள்கள் நீட்டித்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர். எனவே, மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட 70,000 அதிகமாகும்.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் மூன்று வகையாக வெளியிடும். பி.ஏ தமிழ் இலக்கியம்/ பி.லிட் போன்ற படிப்புகளுக்கான தமிழ் தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

அதேபோன்று, பி.ஏ. ஆங்கில இலக்கியத்திற்கான சேர்க்கை ஆங்கில தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.டபுள்யூ., ஆகிய இதர அனைத்து பாடங்களுக்கான பொது தரவரிசைப் பட்டியல், 12ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் தவிர மீதமுள்ள நான்கு பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்ப செயல்முறையின் போது, தாங்கள் தேர்வு செய்த விருப்ப கல்லூரிகள் மற்றும் பாடநெறிகள் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு அந்தந்த கல்லூரிகள் ஒதுக்கீடு ஆணை வழங்கும். இந்த ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில், அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் என அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.