Tourists are allowed in Courtralam: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி

தென்காசி: Tourists are allowed to bathe in Courtralam Falls. குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், ஆலங்குளம், கடையம், குற்றாலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் வெளியூர்களில் இருந்து குற்றாலத்தில் ஆனந்த குளியல் போடலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்த பலர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையின் அளவு குறைந்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இன்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்தருவி, குற்றாலம் பிரதான அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

பழைய குற்றாலம் அருவி பகுதியில் மட்டும் வெள்ளம் குறையாததால் அங்கு மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதையொட்டி, தூத்துகுடி மெயின் அருவி பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.