Tn Cm inquired girl suffering from facial deformity: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

சென்னை: The chief minister inquired about the health of the girl suffering from facial deformity. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டேனியாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டேனியாவை சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

ஆவடியை அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்த திரு. ஸ்டீபன்ராஜ் மற்றும் திருமதி சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டேனியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்தும் இந்நோய் குணமாகவில்லை. சிறுமியின் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்க முகம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியது.

தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழக முதல்வரிடம் சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து முதல்வர் அறிந்தவுடன், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இச்சிகிக்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

மகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதற்காக முதல்வருக்கு சிறுமி டேனியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள்.

முதல்வர் சிறுமி டேனியாவை மருத்துவமனையில் சந்தித்த போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், விரைவில் பள்ளிக்கு செல்லலாம். உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்தார். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு முதல்வர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.