சென்னை: தொடக்க பள்ளியில் பணியாற்றும் (Teachers Protest 2nd Day) இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு அப்போது முதல் குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருநாள் முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிகமான சம்பளம் வழங்கப்படுவதாக இடைநிலை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும்போது எங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு இருக்கிறது. இதன் காரணமாகவே இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றோம்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று முதல் (டிசம்பர் 27) உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



