Tamil Nadu State Human Rights Commission: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: Appointment of two members to the Tamil Nadu State Human Rights Commission. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 -இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993,-இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

மாநில மனித உரிமை ஆணையத்தின் பிரிவு 12-ன் படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ, மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்பப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன்படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றைத் தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்குப் பதிவெண் வழங்கப்படுகின்றது.

புகாரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள் தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20-12-2022) காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.

இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.