Appointment order for 18 Deputy Collectors: துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணிநியமன ஆணை

சென்னை: Appointment order for 18 persons selected as Deputy Collectors. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டில் 1 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 54 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம்;

மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் 2 கோடியே 79 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 2 கோடியே 79 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 3 கோடியே 82 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், சாத்தான்குளத்தில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் திருச்சிராப்பள்ளியில் 2 கோடியே 59 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்; என மொத்தம் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு முதல்வர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிருவாக இணை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) அ. ஜான் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.