TN Police Constable exam 2022 : இன்று காவலர் தேர்வு : 3,552 பணியிடங்கள், 3.66 லட்சம் பேர் போட்டி

தேர்வை 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 இளைஞர்கள், 66 ஆயிரத்து 811 பெண்கள், 59 திருநங்கைகள் எழுதுகின்றனர்.

சென்னை: TN Police Constable exam 2022 : தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 3,552 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை, 3.66 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர் 3,271 பணியிடங்களுக்கு (ஆயுதப்படை -2,180 , தமிழ்நாடு சிறப்புக் காவல் படை -1091), இரண்டாம் நிலை சிறைக் காவலர் -161 தீயணைப்பு வீரர்கள் -120 என மொத்தம் 3.552 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஜூன் 30 – இல் வெளியிட்டது.

தேர்வு எழுத இளைஞர்கள், ஜூலை 7 முதல் ஆக.15 வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். காவலர் தேர்வில் முதல் கட்டமாக , எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 12.40 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 இளைஞர்கள், 66 ஆயிரத்து 811 பெண்கள், 59 திருநங்கைகள் (59 transgenders) என மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர் எழுதுகின்றனர்.

முன்னதாக, தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 15 – ஆம் தேதி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு ஏற்பாடுகள் சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய டிஜிபி சீமா அகர்வால், ஐஜி செந்தில்குமாரி (Selection Board DGP Seema Aggarwal, IG Senthilkumari) ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, தேர்வு நடைபெறும் மாவட்ட காவல் எல்லைப் பகுதி களிலும், மாநகர காவல்துறை எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.