Sugarcane in Pongal gift set: பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: The Tamil Nadu government has announced that sugarcane will be given to all rice family card holders along with the Pongal gift. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2023 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 22ம் தேதி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையில் முதல்டவர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைக்கின்றனர். பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடுதோறும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் கரும்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை 2-1-2023-க்கு பதிலாக 9-1-2023 அன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3-1-2023 முதல் 8-1-2023 வரை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.