covid nasal prophylaxis: பூஸ்டர் டோஸ் போட்டவர்கள் மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்தலாமா?

டெல்லி: பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் (covid nasal prophylaxis) மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள கூடாது என்று நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் அரோரா கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வெற்றிகரமாக செலுத்தியது இந்தியா. இதற்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி மருந்தை கண்டுப்பிடித்தனர். இதனால் கோடிக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்நிலையில், அனைவரும் நிம்மதியாக இருந்த நிலையில் மீண்டும் சீனாவில் புதிய வகையிலான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வேகமாக பரவி வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் அனைத்து நாடுகளுமே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலேயே உலகின் முதல் மூக்குவழி செலுத்தும் ‘இன்கோவாக்’ கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தினை பூஸ்டர் டோஸாக செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக மூக்கு வழியாக எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், இன்கோவேக் தடுப்பூசி பற்றி நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவராக உள்ள அரோரா கூறியிருப்பதாவது: இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருந்து நான்கு சொட்டுகளாக வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான தடுப்பு மருந்து ஆகும். மேலும் மற்ற தடுப்பூசிகளை போலவே இந்த மருந்து செலுத்திக்கொண்ட பின்னர் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அப்போது ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா என்று மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.

மேலும், ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையிலான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூக்கு வழியாக வழங்கும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள முடியாது. அது போன்றவர்களுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுவது இல்லை. அதிலும் நான்காவது டோஸ் எடுத்துக்கொள்வதற்கு இந்தியாவில் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.